இந்தியக் குடிமைப் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்தத் திட்டம்: வைகோ கண்டனம்

 

 

இந்தியக் குடிமைப் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதை முறியடிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

இந்தியா, பாசிச ஆட்சியின் பிடியில் சிக்கி வருகிறது என்று ஜனவரி மாதம், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் வெளிப்படையாகவே பத்திரிகை, ஊடகங்கள் மூலம் எச்சரிக்கை மணி அடித்தனர். நான்கு ஆண்டு கால நரேந்திர மோடியின் அரசு, மக்களாட்சியின் மாண்புகளை சிதைத்து வருவது மட்டுமல்ல, அரசு நிர்வாகத் துறையை தங்களது குற்றேவல் துறையாக மாற்றும் நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங், மே 17 ஆம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பாரதிய ஜனதா கட்சி அரசின் நிர்வாகத்துறை மீதான இந்துத்துவா ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) குடிமைப்பணித் தேர்வுமுறை குறித்து ஆய்வு செய்ய, முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பி.எஸ்.பாஸ்வான் தலைமையிலான குழு ஒன்றை அமைத்திருந்தது. இந்தக் குழு 2016, ஆகஸ்டில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு, குடிமைப் பணிகள் தேர்வு பணி ஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவர முனைந்துள்ளது.

தற்போது நடைமுறையில் குடிமைப் பணிகளின் கீழ் வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 25 மத்திய அரசுப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். பின்னர் இந்த இரு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எ~ப்.எஸ். உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தத் தேர்வு முறையில் பா.ஜ.க. அரசு முக்கியமான மாற்றத்தைத் திணிப்பதற்குத் திட்டமிட்டு வருகிறது. குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுவர்கள், உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு (LBSNAA) அனுப்பப்படுவார்கள்.அங்கு நூறு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியின் போது பயிற்சியாளர்களின் திறன் அறியப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் அடிப்படையில்தான் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

பா.ஜ.க. அரசு புகுத்தி உள்ள இந்தத் தேர்வு முறை அநீதியானது; பாரபட்சமானது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றதும் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் நூறு நாள் பயிற்சியின் போது வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தான் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் இனி பணிகள் ஒதுக்கப்பட மாட்டாது. இது ஒரு வகையான தரப்படுத்துதல் முயற்சியாகும்.

தாய்மொழியில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று வரும் சாதாரண கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட பின்தங்கிய, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களை இந்தியக் குடிமைப் பணிகளில் நுழைய விடாமல் தடுக்கும் சதித் திட்டமாகும். சமூக நீதிக்கு எதிரான மோடி அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இத்தகைய மாற்றத்தின் மூலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்திற்கு பா.ஜ.க அரசு உத்தரவிட்டால், இந்திய நிர்வாகத் துறையில் தங்களுக்கு வேண்டியவர்களை பணியில் அமர்த்த முடியும். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கும்பல் ஆட்டிப்படைக்க முடியும் என்று கருதுகின்றன. இந்துத்துவா கோட்பாட்டின் மூலவரான சாவர்கர், இந்திய இராணுவத்தை இந்து மயமாக்கு என்று கூறியதை, அவர் வழி வந்தவர்கள் நிர்வாகத் துறையை இந்து மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மோடி அரசின் இதுபோன்ற மோசமான நடிவடிக்கைகள் இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு வேட்டு வைத்துவிடும் என்பதை உணர்ந்துகொண்டு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் குடிமைப் பணிகள் தேர்வு முறையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

பா.ஜ.க. அரசின் இத்தகைய பாசிசப் போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். 

Related Posts