இந்தியாவிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் : ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவுரை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என பாகிஸ்தானுக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவுரை வழங்கினார்.

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. மேலும், இந்த விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா.சபையில் விவாதிக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டது.

ஆனால், பாகிஸ்தானின் முயற்சி ரஷியா உள்பட முக்கிய நாடுகளின் உதவியுடன் முறியடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும்படி ஏஞ்சலாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கை குறைத்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என இம்ரான்கானுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Posts