இந்தியா ஆப்கானிஸ்தானிடையேயான கிரிக்கெட் போட்டியில், டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியிருக்க கூடாது

இந்தியா ஆப்கானிஸ்தானிடையேயான கிரிக்கெட் போட்டியில், டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியிருக்க கூடாது என இந்திய வீரர் கே.எல் ராகுல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஃபோர் பிரிவு ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை எடுத்தது. இந்திய அணி, 49 புள்ளி 5 ஓவர்களில் 252 ரன்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகளில் தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர். ஆனால் இருவருமே டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்தியிருந்தால் ஆட்டமிழந்திருக்க மாட்டார்கள். இந்திய அணி வசம் இருந்த ஒரு ரெவ்யூவையும் ராகுல் தவறுதலாகப் பயன்படுத்தியதால் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இதுகுறித்து ராகுல் கூறிகையில், ஒரே ஒரு ரெவ்யூ மட்டும் இருக்கும்போது அதைச் சரியாகப் பயன்படுத்துவது கடினம் தான் எனவும், தான் ஆட்டமிழந்தபோது ரெவ்யூவைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது எனத் தோன்றுவதாகவும் தெரிவித்தார். வெளிப்பகுதியில் பந்து பட்டதாக எண்ணியதால் அதைப் பயன்படுத்தியதாகவும், அதுகுறித்து வெளியே வந்தபிறகுதான் யோசிக்கத் தோன்றியதாகவும் அவர் கூறினார். மேலும், பின்னால் வரும் வீரர்களுக்கு அதை விட்டுத் தந்திருக்கவேண்டும் என்பதை இதிலிருந்து தான் கற்றுக்கொள்வதாகவும், இனி இதுபோல் நடக்காமல் கவனத்துடன் இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts