இந்தியா – இந்தோனேசியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து அந்நாட்டு அதிபர்  ஜோகோ விடோடோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தோனேசியா : மே-30

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு, இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மெர்தேகா அரண்மனைக்கு சென்ற அவருக்கு, ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர், இந்தியா, இந்தோனேசிய நாட்டு கொடிகளை ஏந்தி நின்ற சிறுவர், சிறுமிகளைச் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கைகுலுக்கினார். இதையடுத்து, மெர்தேகா அரண்மனையில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடன், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அதன்பின்னர், இருநாட்டு அதிகாரிகளின் முன்னிலையில், பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதையடுத்து, பிரதமர் மோடியும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு எதிராக போராட்டத்தில் இந்தியாவுடன் இந்தோனேசியாவும் உறுதியாக நிற்பதாக தெரிவித்தார். அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய மோடி, அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். இந்தியா – ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவு, மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், இதனால், இந்தோ – பசிபிக் பிராந்தியம் மட்டுமின்றி, அதை தாண்டியும் அமைதி நிலவுவதாக பிரதமர் மோடி கூறினார்.

Related Posts