இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து

ஜம்மு காஷ்மீரில் 3காவல் அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

         தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது.

         ஆனால் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது ஒரு வகையில் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக,. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்கள்பேச்சுவார்த்தைக்கான சூழலை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும் என கண்டிப்புடன் கூறி வரும் இந்தியா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த, சர்வதேச நாடுகளை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமராக அண்மையியல் பதவியேற்ற இம்ரான்கான், அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்தியா, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசுவார் என தெரிவித்திருந்தது. இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில், பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மூன்று காவல் அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. “இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒருமாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

Related Posts