இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: ஷா மெஹ்மூத் குரைஷி

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே  துணை ராணுவ வீரர்கள் சென்ற  வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்,41 வீரர்கள் உடல் சிதறி கோரமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பிரதமர்  நரேந்திர மோடி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி, கடந்த பிப்ரவரி  26-ம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் எல்லை தாண்டி இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதில் முஸாஃபராபாத் பாலகோட், சாக்கோதி  பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

12 மிராஜ் ரக விமாகங்கள் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் வீசியதாகவும், இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஹிஸ்புல் முகாஜீதின்  அமைப்புகள் அழிந்து போனதாகவும், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்  கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத்  குரைஷி தெரிவித்துள்ளார், தங்களுக்கு கிடைத்துள்ள  உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்று மெஹ்மூத் குரைஷி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  

Related Posts