இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இடம் மாறுவதாக தகவல்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இந்தூரில் இருந்து பரோடாவுக்கு மாற்றுவது குறித்து கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

       இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2-வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி அங்கு நடப்பதில் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு மைதானத்தின் ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீதத்திற்கு மேல் சலுகை டிக்கெட்டுகள் கொடுக்க முடியாது. இதன்படி இந்தூர் ஸ்டேடியத்தின் பெவிலியன் பகுதியில் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கு 720 டிக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்க முடியும். ஆனால் ‘10 சதவீத இலவச டிக்கெட்டுகள் போதாது எனவும், பெவிலியனில் ஆயிரத்து,250 டிக்கெட்டுகள் வேண்டும் எனவும். மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.   கேட்ட அளவு டிக்கெட் தர முடியாது என்றால் போட்டியை தங்களால் நடத்த இயலாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இதையடுத்து போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகவும், இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் பரோடாவுக்கு மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts