இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில், இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

            மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி வரும் 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 193 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவில், இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, முதற்கட்டமாக ஜகர்தாவுக்கு சென்ற இந்திய குழுவினருக்கு ஆசிய போட்டிக்கான விளையாட்டு கிராமத்தில் நுழைய முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. சில மணி நேர தவிப்புக்கு பிறகே அவர்கள் உள்ளே செல்ல போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி வழங்கினர். விளையாட்டு கிராமத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்குரிய கட்டணம் மற்றும் போட்டி கட்டணம், பதிவு கட்டணம் என இந்திய விளையாட்டு அமைச்சகம் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அந்த தொகையை செலுத்தாததால் சிக்கல் ஏற்பட்டது. இந்த தொகையை இன்றுக்குள் செலுத்தாவிட்டால் மறுபடியும் இது போன்ற சிக்கல் ஏற்படலாம் என்று இந்திய பாரா ஒலிம்பிக் குழுவின் துணைத்தலைவர் குர்ஷரன் சிங் தெரிவித்துள்ளார்.

Related Posts