இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க மோடி தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட வேண்டும்

இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க மோடி தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

 தந்தை பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோ பொதுவாழ்வுப் பொன் விழா என மதிமுகவின் முப்பெரும் விழா மாநில மாநாடு, ஈரோடு மூலக்கடையை அடுத்த கலைஞர் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேசிய மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்துரைக்குப்பின் ஏற்புரையாற்றிய பொதுச் செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயகத்துக்கும், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும், பல தேசிய இனங்களை கொண்ட இந்த நாட்டில், இந்த ஒருமைப்பாடு நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறினார். மதவாத, சங்பரிவார் இயக்கங்களின் அராஜகத்தன்மை 2019-ம் ஆண்டுக்குப் பிறகும் தொடர்ந்தால் நாட்டின்ஒருமைப்பாடு நிலைக்குமா என்று வினவிய வைகோ, இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க மோடி தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்றார்.

 தொடர்ந்து பேசிய வைகோ, தமிழ் ஈழம் மலர்ந்து ஐ.நா.சபையில் தமிழர் நாட்டுக்கு என்று பிரதிநிதி வேண்டும் எனவும், தம் இதயத்தில் பதிந்த பிரபாகரன் என்ற ஓவியத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது எனவும் உறுதிபட தெரிவித்தார். இன்று டெல்லியில் உட்கார்ந்து கொண்டு 7 நாட்டு படைகள் உதவியுடன் விடுதலை புலிகளை அழித்தோம் என்று ராஜபக்சே கொக்கரிப்பதை சுட்டிக்காட்டிய வைகோ, 7 நாட்டு படை உதவி இல்லாமல் இருந்திருந்தால்,சிங்கள படையை வைத்துக்கொண்டு விடுதலை புலிகளை ராஜபக்சேவால் வென்றிருக்க முடியாது என்றார்.  தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு நரேந்திர மோடியுடன் கூட்டணி வைத்ததுதான் என்ற வைகோ, ஆனாலும்,பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்தபோது, அவர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக கூட்டணியிலிருந்து வெளியேறியதை குறிப்பிட்டார்.

மதிமுக தொண்டர்களின் ரத்த அணுக்களில் ஈழ விடுதலை என்ற உணர்வு கலந்து உள்ளது எனவும், மதவாத ஆட்சி அகன்று. மத்தியில் கூட்டணி தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி அமையும் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் இந்த அரசு அகற்றப்பட வேண்டும் எனவும், தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்கிற உறுதியை எடுத்துக்கொண்டு கூட்டணியை அறிவித்து இருப்பதாகவும் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

முன்னதாக, மாநாட்டில் கலைஞர் கருணாநிதியின் உருவப் படத்தை திமுக பொருளாளரும், சட்டபேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் திறந்து வைத்தார். வைகோ பொது வாழ்வு பொன்விழா மலரை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். பொதுச்செயலாளர் வைகோவுக்கு திராவிட இயக்கத்தின் போர்வாள் என்ற பட்டயத்தை  காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவழங்கி பாராட்டினார்.

Related Posts