இந்திய கடற்பரப்பில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் : கரம்பீர் சிங்

இந்திய கடற்பரப்பில் ஊடுருவிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற இந்திய கடற்சார் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு கடற்படை தளபதி கரம்பீர் சிங் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நீரடி தாக்குதலில் ஈடுபட பயிற்சி எடுப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார்.

கடற்படை முழு அளவில் எச்சரிக்கையாக உள்ளது என்ற அவர், உளவுத்துறை தகவலை அடுத்து கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

நீரடி தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் இப்போது தான் பயிற்சி பெறுவதாக கூறிய அவர், நாட்டின் எந்த இடத்திலும் பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட கடற்படை அனுமதிக்காது என்றார். கடற்படை முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளதாக கரம்பீர் சிங் தெரிவித்தார்.

இதே போன்று பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை வந்துள்ளதாக விமானப்படை தளபதி பி.எஸ். தனோவாவும் சில நாட்களுக்கு முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Posts