இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல்

மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இந்த மிரட்டல் இ-மெயில் தகவலை அங்கிருந்து ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பகிரப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இந்த தகவலை பிசிசிஐ மறுத்துள்ளது. பயங்கரவாதிகள் மிரட்டல் தொடர்பாக வந்த தகவல் புரளி என்றும், இருந்தாலும் இந்திய அணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுபற்றி ஆண்டிகுவா அரசுக்கு இந்திய தூதரகம் தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Related Posts