இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்

India Chief Election Commissioner Sunil Arora

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். 
 இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று பிற்பகலில் சென்னை வருகின்றனர். இந்தக் குழுவினர், நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளனர்.

தேர்தல் ஆணையர்கள், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.   மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 1,460.02 கோடி ரூபாய் ரொக்கப் பணம் இந்தியா முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 108.75 கோடி ரூபாய் ரொக்கப் பணமாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 

Related Posts