இந்திய பொருளாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது

இந்திய பொருளாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில்,  தற்போது இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மன்மோகன் கூறியுள்ளார். கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்திருப்பது,  இந்தியாவில் நீண்ட நாட்களாக தேக்க நிலை நீடித்ததற்கான ஆதாராமாக உள்ளது என்பது அவரது கருத்து. இந்திய பொருளாதாரம் இதைவிட வேகமாக வளர்க்க கூடிய சூழல் இருந்தும், மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். உற்பத்தி துறையின் வளர்ச்சி வெறும் 0.6 சதவிகிதமாக இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறியிருக்கும் மன்மோகன் சிங், இதை வைத்து பார்க்கும் போது மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றிலிருந்து இந்திய பொருளாதாரம் மீளவில்லை என்பது தெளிவாவதாக அவர் கூறியுள்ளார். இந்திய பொருளாதாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க கூடாது என்பதால், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பொருளாதாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல சலுகைகளை கடந்த இரண்டு வாரமாக அறிவித்து வருகிறார். இந்தச் சூழலில் 2019-20-ம் நிதியாண்டின், முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

Related Posts