இந்திய ராணுவம் மோடியின் படை என்று கூறியது குறித்து விளக்கம் கேட்டு உ.பி. முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

டெல்லியை அடுத்த காஜியாபாத்தில் போட்டியிடும் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கை ஆதரித்து ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டுஉரையாற்றினார். அப்போது புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததை சுட்டிக் காட்டி பேசிய அவர்,  ராணுவத்தை மோடியின் படை என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜால் எது முடியாதோ, அது பிரதமர் மோடியால் செய்து முடிக்க முடியும் என்றார். . காங்கிரசார்  தீவிரவாதிகளுக்கு பிரியாணி ஊட்டி உபசரித்தார்கள் எனவும்,  ஆனால் மோடியின் ராணுவம், தீவிரவாதிகளை துப்பாக்கி குண்டாலும், வெடிகுண்டாலும் சுட்டு தள்ளியதாகவும் அவர் குறிப்பிட்டார்.  யோகியின் பேச்சுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.இதையடுத்து யோகியின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ பதிவை உடனே சமர்ப்பிக்குமாறு காஜியாபாத் மாவட்ட ஆட்சியருக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த பேச்சு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது என்றும் இது குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது. 

Related Posts