இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியை வாழ்நாளில் பார்த்ததே இல்லை

இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியை வாழ்நாளில் பார்த்ததே இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கவும், பாஜக அரசின் மீதான விமர்சனங்களை திசைதிருப்பவுமே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். பணமதிப்பிழப்பு தொடங்கி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து வரை தனது தந்தை ப. சிதம்பரம் விமர்சித்து வந்தார் எனவும், அவரை அடக்கி ஒடுக்கவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் கூறினார். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்ததில்லை என்று கூறிய அவர், தன்னை விசாரணைக்கு சிபிஐ அழைத்துச் சென்ற போதுதான் இந்திராணி முகர்ஜியை பார்த்ததாகத் தெரிவித்தார்.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கான முன் ஜாமீன் மனுவை நேற்று முன் தினம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், நேற்று இரவு டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

Related Posts