இந்தி சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க இளைஞர்களுக்கு அழைப்பு

இந்தி சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் மதிமுக சார்பில் சென்னை நந்தனம் ஒய்,எம்.சி.ஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு மல்லை சத்யா தலைமை தாங்குவார் என்றும் ஸ்டாலின், பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று எழுச்சி உரையாற்றுவார்கள் என்றும் கூறினார். இந்தக் கூட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.க கால் ஊன்ற முடியாத இடமாக தமிழகம் திகழ்வதாகவும், தமிழக அரசு பா.ஜ.கவுக்கு கைப்பாவையாக செயல்பட்டு வருவதாகவும் சாடினார். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பை தடுக்க இளைஞர்கள் பெருமளவில் அணி திரள வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டார்.

இந்தி மொழி மட்டுமே வேண்டும் என்றால், இந்தி மொழி இருக்கக்கூடிய இடம் மட்டும் தான் இந்தியாவில் இருக்கும் என்று கூறிய வைகோ, ஒருங்கிணைந்த இந்தியாவாக இந்தியா இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அமித்ஷா முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

Related Posts