இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து வரும் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு வருமாறு திமுக-வினருக்கு அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக மகிழ்ச்சிக் கடலில் நீந்தி மனம் மயங்கிடும் இயக்கமல்ல; மக்களின் நலன் காக்கும் அறப்போர்க் களத்தில் எப்போதும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்த இயக்கம் என கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணிப்போம் என்று குறிப்பிட்டுள்ள அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, அதேநேரம், எந்த மொழியும் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த விடமாட்டோம் என உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். அன்னைத் தமிழை காப்பது தான் நமக்கு பெரும் மகிழ்ச்சி, அதற்கான போராட்டமே நமக்கு திருவிழா என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் அடையாளமாக இந்தி தான் இருக்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சரின் பேச்சு நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்தி என்ற ஆதிக்க அணுகுண்டைக் கொண்டு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுத்திவிடாதீர்கள் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts