இந்து மதம் குறித்து அவதூறாக பேசவில்லை என்று மோகன் சி.லாசரஸ் விளக்கம்

இந்து மதம் குறித்து அவதூறாக பேசவில்லை என்று மோகன் சி.லாசரஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி.லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. அதில் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக பலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கோவை, பொள்ளாச்சி, நாசரேத், பாளை பெருமாள்புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மோகன் சி.லாசரஸ்,  இந்து தெய்வங்களை பற்றியோ, மதத்தை பற்றியோ இழிவுப்படுத்தி பேசவில்லை எனவும், சர்ச்சைக்குரிய அந்த காட்சி எப்பொழுது பேசியது என்று அதில் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் இதுபோன்று பேசியதில்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காட்சி அது எனவும், அதில் சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார், தனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மதத்தில் உள்ளனர் எனவும், அவர்களிடம் கூட  தவறுதலாக பேசியதில்லை எனவும் மோகன் சி.லாசரஸ் கூறியுள்ளார்.

Related Posts