இந்தோனேசியாவில் சுனாமியை அடுத்து எரிமலை வெடித்தது

இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து புகையைக் கக்கத் தொடங்கியதையடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த 29-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதில் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள், விடுதிகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. வீடுகள் இன்றி தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400 ஐ தாண்டியுள்ளது. இந்த சுனாமியின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள், சுலவேசி தீவில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து புகையைக் கக்கத் தொடங்கி உள்ளது. இதனால், எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாயம் உள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது 6 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு பரவி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் விமானங்களை இயக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts