இன்றும் நாளையும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புயல் உருவாகும் நிலையில், இன்றும் நாளையும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த தாழ்வு நிலை சென்னையில் இருந்து கிழக்கே800 கிலோ மீட்டர். தூரத்தில் நிலைக் கொண்டுள்ளதாகவும் அது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பெதாய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நாளை மறுநாள் பிற்பகல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கி நாடா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து  நாளையும், நாளை மறுநாளும் ஆந்திர மாநிலத்திற்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயல் காரணமாக தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று கனமழையும் நாளை அதி கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . மணிக்கு 80கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.   இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு காற்று வீசியதோடு பல இடங்களில் லேசான மழை பெய்தது

Related Posts