இன்று அட்சய திருதியை: நகைக்கடைகளில் குவிந்த பெண்கள்

 

இன்று அட்சய திருதியை என்பதால் நகைக் கடைகளில் நகை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஏப்ரல்-18

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை நாள் அட்சய திருதியை ஆகும். இந்த அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இன்று அட்சய திருதியை என்பதால் நகைக் கடைகளில் நகை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை தி.நகர், புரசைவாக்கம், தாம்பரம், பாடி, போரூர், வேளச்சேரி, குரோம்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் இன்று அதிகாலை 5 மணிக்கே திறக்கப்பட்டன. காலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் குவியத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல பெண்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பெரும்பாலான பெண்கள் குழந்தைகளுடன் நகை வாங்க வந்திருந்தனர்.பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் பெரும்பாலான நகைக்கடைகள் இன்று நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நகைக்கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி நகைகளை வாங்கிச் செல்ல வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தங்க நாணயம் மட்டும் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி கவுண்டர் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கவுண்டர்களில் வரிசையில் நின்றபடி வாடிக்கையாளர்கள் தங்க நாணயங்களை வாங்கிச் சென்றனர். பல கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்கள் மட்டும் நகைக் கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வெளியே அமர வைக்கப்பட்டனர். உள்ளே சென்றவர்கள் நகை வாங்கி விட்டு வெளியே வந்ததும் மற்ற வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நகைக் கடைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Posts