இன்று நடைபெறும் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடகாவில் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை நடைபெறும் என கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ்  கூட்டணி ஆட்சி, கடந்த, 14 மாதங்களாக நடைபெற்றுவந்தது. இம்மாத துவக்கத்தில், காங்கிரஸ்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் சுயேட்சைகள் என 19 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நீண்ட இழுபறிக்கு பின், 23-ம் தேதி, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கைவாக்கெடுப்பில்  குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து முதல்வராக, பா.ஜ.கவை சேர்ந்த எடியூரப்பா  பதவியேற்று கொண்டார். இந்நிலையில் இன்று அவர்  தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க உள்ளார். இதனிடையே அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமடஹள்ளி மற்றும் சுயேச்சை சட்டமன்ற    சங்கர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர்  உத்தரவிட்டார். இந்நிலையில், காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர்  10 பேர் உட்பட 14 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது

பெங்களூரு விதான் சௌதா வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டப் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், இன்று காலை 11 மணிக்கு எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை தொடர்ந்து அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கும் மசோதா விவாதத்துக்கு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதனிடையே, கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் பிறப்பித்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 14 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Related Posts