இன்று மாலை நடைபெறுகிறது அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடவுள்ள நிலையில், அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், தனித்தனியாக இன்று மாலை நடைபெறவுள்ளது.

சென்னை : மே-28

தமிழக சட்டசபைக்கூட்டம் நாளை தொடங்கி ஜூலை மாதம் 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறவுள்ளது. துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக கூடவுள்ள தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பவுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், பேரவைக் கூட்டதொடரின்போது, அதிமுக உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதேபோல், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சட்டபேரவை கொறடா சக்ரபாணி தெரிவித்துள்ளார். இதில், எந்தெந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் யார், யார் பேச வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

Related Posts