இன்று முதல் ஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது

பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும்,  இன்றுமுதல் விலை உயர்வு அமலுக்கு வந்ததாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பசுந்தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக அதாவது 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக, அதாவது 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, , பால் போக்குவரத்துக்கான செலவுகள் உயர்ந்து உள்ளதால் பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் அறிவித்தபடி பால் கொள்முதல், பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts