இன்று முதல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000, ரூபாய் அபராதம்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000, ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், இன்று முதல் அமலாகிறது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட மசோதா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடும் எதிர்ப்புக்கு இடையே, மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி, இந்தச் சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் இந்தச் சட்டத்திருத்தம் அமலாகிறது.
இதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000, ரூபாயும், அதிவிரைவாகவும், பொறுப்பற்ற வகையிலும் வாகனம் ஒட்டினால்  5,000, ரூபாயும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 ரூபாயும் அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000, ரூபாயும் வாகனங்கள் இயக்கத்தில் இருக்கும் போது செல்லிடப்பேசி பயன்படுத்தினால் 5000,ரூபாயும், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்பவர்களுக்கு  20,000 ரூபாயும் அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்த அபராதம் பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல் அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் கார், பைக், ஸ்கூட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும் எனவும் மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்வதோடு, இந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துவிட்டால் 2 லட்சம் ரூபாய் வரையும் விபத்தில் படுகாயமடைந்தால் அவர்களுக்கு 50,000 ரூபாய் வரையும் இழப்பீடு வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.

Related Posts