இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 24 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலில் சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையால் சட்லஜ் நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் நிலையில், சிம்லா அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஷாக்ரா, பாலடி, பிண்ட்லா மற்றும் ஜெட்வி உள்ளிட்ட கிராமங்கள் மற்ற இடங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. லகால் ஸ்பிதி மாவட்டத்தில், வெள்ளத்தில் சாலை அடித்து செல்லப்பட்ட நிலையில், அங்கு வெளிநாட்டினர் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகள் 400க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களில் 150 பயணிகள் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்துள்ள புன்ட்டார் – மணிக்கரான் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் மணாலி – குலு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், கனமழையால் சாலையின் ஒரு பகுதி அரித்து செல்லப்பட்ட நிலையில், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹமிபூர் மாவட்டத்தில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

Related Posts