இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

 பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காயத்தில் சிக்கிய ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறப்பாக தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நேற்று ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்திருந்தது. 3 பேட்ஸ்மேன்கள் நேற்று அரைசதம் அடித்தனர். டிம் பெய்ன் 16 ரன்னுடனும், பேட் கம்மின்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும், ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.. 108 புள்ளி3ஓவர்கள் தாக்கு பிடித்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும்,  பும்ரா, உமேஷ் யாதவ், விகாரி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Related Posts