இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழகத்திற்காக போராடுவேன்

இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழகத்திற்காக போராடுவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-25

தமிழக நலனுக்காக, மதிமுகவை சேர்ந்த சிவகாசி ரவி, பெருமாள்பட்டி சரவண சுரேஷ், ஈரோடு தர்மலிங்கம், கரையான்குறிச்சி மணிகண்டன் ஆகியோர் உயிர் நீத்தனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நினைவு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற நினைவு அஞ்சலிக் கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளித்து உயிரிழந்த சிவகாசி ரவியின் உருவ படத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த சரவண சுரேஷின் உருவ படத்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவும், ஈரோடு தர்மலிங்கம் உருவப் படத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும் திறந்துவைத்தனர். இதேபோல், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த மணிகண்டன் உருவபடத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இனி யாரும் தீக்குளிக்காமல் இறுதி வரை நின்று போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழகத்திற்காக போராடுவேன் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Related Posts