இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 21–ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 258 பேர் உயிரிழந்ததுடன், 500–க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரத்தில் உள்ளூரில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேலும் ஒரு மாதத்துக்கு அவசர நிலை தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை சிறிசேனா பிறப்பித்து உள்ளார்.

அவசர நிலை பிறப்பித்து இருப்பதன் மூலம் சந்தேகப்படும் நபர்களை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். அதன்படி குண்டுவெடிப்பை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய 1000–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவசர நிலை மேலும் நீட்டிக்கப்படாது என கடந்த மாதம் சிறிசேனா கூறியிருந்த நிலையில், மீண்டும் அது நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts