இலங்கையில்  தொடர்  வெடிகுண்டு தாக்குதலை அடுத்து சென்னை ரெயில் நிலையங்களில்  தீவிர சோதனை

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  5 நட்சத்திர விடுதிகள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்களுள் 2 பெண்கள் உட்பட 9 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்புவில் பல்வேறு முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன. . மேலும் இலங்கையில் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டுகள் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில், அந்நாட்டு ராணுவம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இலங்கையின் அண்டை நாடான இந்தியாவிலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசார் இன்று காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Related Posts