இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை விமானங்கள் பறக்க தடை 

இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில், 10 இந்தியர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, முன்கூட்டியே பாதுகாப்புத் துறை தலைவர்களுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் எச்சரித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், கடமையைச் செய்ய தவறியதற்காக பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அதிபர் சிறீசேனா வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அதிபர் சிறீசேனா தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில், இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதித்து இலங்கை விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Related Posts