இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெண் தர மறுத்ததால் தாயையும், மகளையும் வெட்டிக்கொன்ற இளைஞர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

திருவண்ணாமலை : ஜூன்-24

ஆரணி அருகே படவேடு காளிகாபுரத்தைச் சேர்ந்த சிவராமன் – சாமுண்டீசுவரி தம்பதியரின் மகள் நிர்மலா. அதே ஊரைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் மகன் அன்பழகன், நிர்மலாவைத் தனக்குத் திருமணம் செய்துவைக்குமாறு சிவராமனிடம் கேட்டுள்ளார். நிர்மலா படிப்பை முடித்தபின் திருமணம் செய்து வைப்பதாக சிவராமன் கூறியதை அடுத்துப் படிப்புக்கு அன்பழகன் பணங்கொடுத்து உதவியதாகக் கூறப்படுகிறது. நிர்மலா படிப்பை முடித்த நிலையில், அவரை அன்பழகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க சிவராமன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்பழகன், சிவராமன் வீட்டுக்குச் சென்று அவரையும் அவர் மனைவி சாமுண்டீசுவரி, மகள் நிர்மலா ஆகியோரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சாமுண்டீசுவரியும் நிர்மலாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தலையில் வெட்டுக்காயமடைந்த சிவராமன், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலைவெறித் தாக்குதல் நடத்திய அன்பழகனும், சிவராமன் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து சந்தைவாசல் காவல்துறையினர் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கொடுக்க மறுத்த குடும்பத்தையே இளைஞர் வெட்டிக்கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts