இளைஞர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பச்சைத் துரோகம் இழைத்துள்ளார் : வைகோ கண்டனம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முறையை மாற்றி தமிழக இளைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சைத் துரோகம்  இழைத்துள்ளதாக தெரிவித்துள்ளதாக வைகோ,  புதிய பாடத் திட்ட தேர்வு முறையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கு 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுவதையும், முதல்நிலைத் தேர்வில் மொழிப்பாடப் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 100 கேள்விகள் கேட்கப்பட்டு வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி மொழித்தாள் முற்றிலும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பொது அறிவு வினாத்தாள் அதிகரிக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருப்பதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடத்தை நீக்கி இருப்பதன் மூலம் தமிழே தெரியாமல் ஒருவர் மாநில அரசு பணியில் சேருவதற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள வைகோ, தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை இல்லை என்ற நிலையை எடப்பாடி பழனிசாமி அரசு உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவு தமிழக இளைஞர்களுக்கு பச்சை துரோகம் இழைத்து, மன்னிகவே முடியாத மாபாதகச் செயலை செய்திருப்பதாகவும் வைகோ சாடியுள்ளார். 2016 ஆம் ஆண்டு வரை தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையை அதிமுக அரசு மாற்றியமைத்ததையும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உதவி மின்பொறியாளர் பணி இடங்களுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த 36 பேர் தேர்வு செய்யப்பட்டதையும் வைகோ நினைவு கூர்த்துள்ளார். தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், எடப்பாடி பழனிச்சாமி அரசு டெல்லி பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் கீழ் இதுபோன்ற துரோக செயலில் ஈடுபடுவதாகவுமன் வைகோ சாடியுள்ளார். மேலும், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பாடத்திட்ட தேர்வு முறை மாற்றி அமைத்ததை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts