இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் ஆறுதல்

சந்திரயான்-2 விண்கலம் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தரும் வகையில் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சந்திரயான்-2 மூலம், இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு அர்ப்பணிப்பையும், தைரியத்தையும் காட்டியுள்ளதாகவும், இஸ்ரோவின் செயல்களை நினைத்து எண்ணி நாடு பெருமை கொள்வதாகவும், நாம் அனைவரும் சிறந்ததை நம்புவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சந்திரயான்-2 வை வெகு தொலைவுக்கு சென்றடைய வைத்த இஸ்ரோவின் சாதனை ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய வைத்துள்ளதாகவும், இஸ்ரோவில் கடினமாக உழைக்கும் விஞ்ஞானிகளுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல் ராகுல்காந்தி பதிவிட்டுள்ள டிவிட்டில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் விஞ்ஞானிகளின் பணி வீண்போகவில்லை என குறிப்பிட்ட ராகுல்காந்தி, இது இன்னும் பல பாதைகளை உடைக்கும் என்றும், இந்தியாவின் விண்வெளி பயணங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், அரசு, இஸ்ரோ விஞ்ஞானிகள் பக்கம் நிற்பதாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் தேசத்தை உருவாக்கியுள்ளதாகவும், நிலம், சிந்தனைகள் மற்றும் அறிவாற்றல் மூலம் அவர்கள், விண்வெளி ஆய்வில் சாதனை படைத்துள்ளதாகவும் இதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டுள்ள செய்தியில், விஞ்ஞானிகள் சோர்வடையாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள், தங்களால் இயன்றதை சாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,  இஸ்ரோ விஞ்ஞானிகளின் செயல்பாடுகளால் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த அரிய நிகழ்வின் மூலம் அறிவியல், தொழில்நுட்பத்தின் மீது லட்சக்கணக்கானோரை நம்பிக்கை கொள்ள செய்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Related Posts