ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது

 ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர், ஈரானில் பல்வேறு சிறப்பு அதிகாரங்களுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வருவதுடன், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஈரான் மீதான அழுத்தத்தை கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்., ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையுடன் உலகின் எந்த வங்கிகளும், நிறுவனங்களும் தொடர்பு வைத்துகொள்ளக் கூடாது  எனவும்,  அவ்வாறு தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  ஈரான் அரசு  மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிற நாட்டின் அரசு படையை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts