ஈழத்தமிழர்களை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சிங்கள அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைக்க, தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, இந்திய அரசு பல வழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் சந்தேக வழக்குகளில் கைதாகின்ற இளைஞர்களை விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பது வழக்கம் என்றும், ஆனால், ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றிமுதலில் செங்கல்பட்டிலும்  பின்னர்  அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு மாற்றி, அங்கே ஆண்டு கணக்கில்அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவிதமான குற்றச்சாட்டுப் பதிவும் இல்லாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்த இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருவதை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள வைகோ, . அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருவதாக சாடியுள்ளார். இந்திய அரசு, ஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருவதாகவும்,  இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தள்ளார்.  பல அகதி முகாம்களைப் பார்வையிட்டு, அங்கே உள்ள அவலநிலையை நேரில் கண்டு அறிந்துள்ளதாகவும்,  எந்தவித அடிப்படை வசதிகளும்  இன்றி,  கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர்களது வேதனைக் கண்ணீரைப் பல மேடைகளில் எடுத்துக் கூறி இருப்பதாகவும்,ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழத்தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடியுரிமையும் வழங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்திடாத நிலையில், குடிஉரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களின்விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என, நேற்று  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். . எனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை,இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது என்றும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்வதுடன்; அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வைகோ  வலியுறுத்தியுள்ளார்.

Related Posts