உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்ப்பு

உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார் . அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

            உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தனது பதவிக்காலம் முடிவடையும் தருவாயில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை ஏற்று ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு  பெற்றதை அடுத்து, புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்றத்தின்  46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ரஞ்சன் கோகாய் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.  நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts