உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாநில பாஜக தலைவர் சாமிநாதன், பாஜக பொருளாளர் சங்கர் மற்றும் பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்  3 உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்யாத சூழலில் ஆளுநர் மாளிகையில் தாமாகவே முன்வந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 2017 ஜூலை 4 ம் தேதி இரவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் குறித்து, மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல், சட்டப்பேரவை செயலகத்துக்கு வரவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பிய கடிதம் சட்டசபை செயலகத்தை கட்டுப்படுத்தாது என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்து  3 நியமனஉறுப்பினர்களையும் சட்டப்பேரவைக்குள் வரவும் தடை விதித்திருந்தார். இதுதொடர்பான  வழக்கை விசாரித்தசென்னை உயர்நீதிமன்றம் நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நேற்றுமுன்தினம் உறுதி செய்தது.இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர்  நாராயணசாமி, நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் பல்வேறு சட்டசிக்கல்கள் உள்ளன எனவும்,  இந்த தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களை கலந்து பேசி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts