உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது என கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள அய்யப்பன் நித்திய பிரம்மசாரி என்பதால் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று அதிரடி தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் அதே வேளையில், ஆதரவுக்குரல்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெற்ற கேரளா அமைச்சரவைக் கூட்டத்தில், அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்வது குறித்து  ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட மாட்டது எனவும் இனி சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுக்கவும் முடியாது எனவும் தெரிவித்தார். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்று திறக்கப்படுவது வழக்கம் எனவும், அதன்படி வருகிற 17-ந்தேதி ஐப்பசி மாத பிறப்பின் போது நடை திறக்கப்படும் எனவும் கூறிய முதல்வர், 18-ந்தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார். இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வரும் 18-ந்தேதி முதல் பெண் பக்தர்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts