உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சீனா பயணம்

சீனாவில் வரும்  27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறும் முறைசாரா உச்சி மாநாட்டில்  பங்கேற்க பிரதமர் மோடி இன்று மாலை செல்லவுள்ளார். 

டெல்லி : ஏப்ரல்-26

டோக்லாம் எல்லை பிரச்சனையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீடித்த மோதல் காரணமாக இந்திய-சீன உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக, சீன அதிபரின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி இன்று மாலை சீனா செல்கிறார்.

இந்த சந்திப்பு தொடர்பாக சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ  உச்சி மாநாடு முழுமையான வெற்றி பெறும் எனவும் சீனா-இந்தியா உறவுகளில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம், எல்லைப் பிரச்சனை, போன்றவற்றுக்கு சுமுகத்தீர்வு காணும் வகையில் இப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது எனவும் இரு தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோடி  பிரதமரான பின் 4-வது முறையாக சீனா செல்கிறார். இதுபோன்று முறைசாரா பேச்சுவார்த்தையானது கடந்த 1954-க்கு பிறகு முதன்முறையாக நடக்கவுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Posts