உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு: தஞ்சையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை

தஞ்சை பெரியகோவிலில் நடைபெற இருந்த தியான பயிற்சி வகுப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தது.  அப்போது நீதிபதிகள் முன்பு ஆஜராகி முறையிட்ட கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர், தஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற உள்ளது எனவும், இது அப்பட்டமான விதிமீறல் என தெரிவித்தார். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும், மேலும் இந்த அமைப்பினர் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்தால், அவசர வழக்காக 1மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வெங்கட், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவினை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள் மற்றும் கூடாரங்களை உடனே அகற்றப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் தியான பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் பேரணியாக சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை காவல்துறையின் கைது செய்து அப்புறப்படுத்தினார்.

Related Posts