உரங்களின் விலையை உயர்த்தி, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்திற்கு உரியது

உரங்களின் விலையை உயர்த்தி, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

          இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவ கால மாறுபாடு, போதிய மழையின்மை, வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால், விவசாயிகள் வேளாண் தொழிலைக் கைவிட்டு வெளியேறும் நிலைக்கு  ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பேரிடியாக விவசாயத்திற்குத் தேவையான இரசாயன உரங்களின் விலையேற்றம் விவசாயிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

          கடந்த ஜனவரி மாதம் ஆயிரத்து 150 ரூபாயாக இருந்த  50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உர மூட்டையின் சில்லரை விற்பனை விலை கடந்த எட்டு மாத காலத்தில் 275 ரூபாய் அதிகரித்து, தற்போது ஆயிரத்து 425 ரூபாயாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

         இதேபோல் ஜனவரி மாதம் 889 ரூபாயாக இருந்த  என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை தற்போது ஆயிரத்து 015 ரூபாயாக அதிகரித்துவிட்டது எனவும், பொட்டாஷ் விலையும் 20 விழுக்காடு உயர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

         உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது எனவும், இதனால் உரம் தயாரிப்பு நிறுவனங்கள் விலையைத் தாறுமாறாக உயர்த்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

         உரம் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பரிக் ஆசிட் விலை பன்னாட்டுச் சந்தையில் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு என காரணங்களை காட்டி, உர நிறுவனங்கள், விலை உயர்வை நியாயப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

        மத்திய பா.ஜ.க. அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்திருப்பதாகவும், குறிப்பாக பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் மோடி அரசின் முகத்திரையைக் கிழித்து, உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

       வங்கிக் கொள்ளையர்களை தப்பவிட்டு வேடிக்கைப் பார்க்கும் மோடி அரசு, ஏழை எளிய விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது என அவர் தெரிவித்துள்ளார்.

        உரங்களின் விலைகளை குறைத்து, கட்டுக்குள் வைத்து, வேளாண்மைத் தொழில் அழிந்துபோகாமல் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Posts