உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.ஜி.ஆர். கலை சமூக ஆய்வு இருக்கை

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியில், எம்.ஜி.ஆர் கலை, சமூக ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-28

சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்செந்தூர் சுப்ரமணியசாமி திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்காக, சுமார் 31 கோடி ரூபாய் செலவில் தங்கும் இடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள நிதி வசதி இல்லாத ஆயிரம் கோவில்களுக்கு, தலா 1 லட்சம் வீதம் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் திருப்பணிகள் நடைபெறும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விளையாட்டுத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் சுமார் 17 கோடியே 35 லட்ச ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வேலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் 17 கோடியே 30 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனக்கூறியுள்ள அவர், இறகு பந்து அகாடமி 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் வைப்பு நிதியில் எம்.ஜி.ஆர் கலை, சமூக ஆய்வு இருக்கை அமைக்கப்படும் எனவும் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Related Posts