உலகம் உள்ளவரை சிவந்தி ஆதித்தனாரின் புகழ் நிலைத்து நிற்கும்

உலகம் உள்ளவரை சிவந்தி ஆதித்தனாரின் புகழ் நிலைத்து நிற்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

        பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  அவரது திருவுருவப்படத்திற்கு அவருடைய மகன் பாலசுப்ரமணிய ஆதித்தனார் மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கொடை கொடுக்கும் வலிமை உள்ளவர் சிவந்தி ஆதித்தனார் எனவும், ஆசிய கண்டத்தில் அதிக மக்கள் படிக்கும் நாளிதழ் தந்தி எனவும் கூறினார். அனைத்து விளையாட்டு கலைகளிலும் உலக அளவில் தமிழர்களை தலைநிமிரச் செய்தவர் சிவந்தி ஆதித்தனார் எனவும், உலகப் போட்டிகளில் பங்கேற்க கைப்பந்து அணிகளை தமது சொந்த செலவில் அனுப்பி வைத்தவர் எனவும் வைகோ புகழாரம் சூட்டினார். அனைத்து துறைகளிலும் இமாலய வெற்றி பெற்ற அவரது புகழ், உலகம் உள்ளவரை  நிலைத்து நிற்கும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

         அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், விஜிபி சந்தோசம்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Posts