உலகம் முழுவதும் குழந்தைகள் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

பருவநிலை மாற்றத்தை தடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருவநிலை மாற்றம் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஆண்டுதோறும் மாறி வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பார்க் வாரம்தோறும் பருவநிலை மாற்றத்தை தடுக்க வலியுறுத்தி தங்கள் நாட்டு பாராளுமன்றம் முன்பு நின்று போராட்டம் நடத்தி வந்தார். அவரது போராட்டத்துக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக பருவநிலை மாற்றத்தை தடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் பள்ளி செல்வதை புறக்கணித்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் ஆண்டுதோறும் கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும், இது மனிதர்களின் வாழ்வியலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்,. உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

Related Posts