உலகம் முழுவதும் வசூலை குவித்து வரும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம்

 

 

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம், உலகம் முழுவதும் பெரும் வசூலைக் குவித்து சாதனை படைத்து வருகிறது.

மே-02

ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படம் கடந்த வாரம் வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது.

உலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம், முந்தைய படங்களின் முதல் வார வசூல் சாதனைகளை தகர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 27ஆம் தேதி வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான மூன்று நாட்களிலேயே சீனாவை தவிர்த்து உலகம் முழுவதும் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ள இப்படம், முதல் வாரத்தில் மட்டும் 4,100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் வசூல் மழை பொழிந்து வருகிறது. முதல் நாளன்று இந்தப் படம் இந்தியாவில் நான்கு மொழிகளிலும் ரூ. 31.30 கோடி வசூலித்து இந்த வருடம் இந்தியாவில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை நிகழ்த்தியது. அதேபோல இந்தியாவில் முதல் நாளன்று அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் என்கிற பெருமையையும் அவெஞ்சர்ஸ் தட்டிச்சென்றுள்ளது.

2018-ல் இந்தியாவில் வெளியான படங்களில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படம் என்கிற பெருமை பாகி 2 வசம் இருந்தது. அந்தப் படம் முதல் நாளன்று ரூ. 25.10 கோடி வசூலித்தது. மூன்று மொழிகளில் வெளியான பத்மாவத், முதல் நாளன்று ரூ. 24 கோடி வசூலித்தது. இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான அவெஞ்சர்ஸ், 4 நாள்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது. நான்கு நாள்களிலும் ஒட்டுமொத்தமாக ரூ. 147 கோடி வசூலித்துள்ளது.

கடந்த வருடம் பாகுபலி படம் வசூலில் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியதுபோல அவெஞ்சர்ஸ் படமும் இந்தியாவில் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts