உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா முதலிடத்தை பெற்று வரலாற்று சாதனை

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் நடைபெற்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்றில், முன்னிலையை தக்க வைத்து கொண்ட அபிஷேக் வர்மா 244.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை 22 வயதான யாஷ்அஸ்வினி சிங் தேஸ்வால் பெற்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் அபூர்வி சண்டிலா, தீபக் குமார் இணை தங்கம் வென்றது. இதேபிரிவில் அஞ்சும் மவுட்கில், திவ்யான்ஷ் சிங் இணை வெண்கலம் வென்றது. டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள, யாஷ்அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மவுட்கில், அபூர்வி சண்டிலா, சயுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சர்னோபத் மற்றும் மனு பேக்கர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Related Posts