உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை சிந்து எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிந்துவின் கை ஒங்கியிருந்தது. இறுதியில்  21-7, 21-7 என்ற நேர் செட்களில் நசோமி ஒகுஹாராவை தோற்கடித்து பி.வி.சிந்து பட்டம் வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார். மேலும் உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகளிர் இறுதிப்போட்டியின் வெற்றியை தனது தாயின் பிறந்தநாளுக்கு அர்ப்பணிப்பதாக பி.வி. சிந்து பெருமிதத்துடன் கூறினார்.

இந்நிலையில்,  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது என்று தெரிவித்துள்ளார். பி.வி. சிந்துவின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி கோடிக் கணக்கானவர்களை கவர்ந்துள்ளது எனவும் இனி  வருங்கால போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

Related Posts