உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர்  வெடிமருந்து நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலுக்கு பிறகு கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் சிலர், பாகிஸ்தானில்  உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைமையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை உளவுத்துறை இடைமறித்து கேட்டது.  புல்வாமா தாக்குதல் வெற்றி அடைந்து விட்ட நிலையில்,  அடுத்தக்கட்டமாக மீண்டும் ஒரு, பெரிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பது உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய பாதுகாப்பு படையில் முந்தைய தாக்குதலை விட அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது.  இந்த பயங்கர தாக்குதலை காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு வெளியே நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை பிப்ரவரி அறிக்கையின்படி, காஷ்மீர் உட்பட 3 இடங்களில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்காக 3 தற்கொலைப்படையினர் உள்ளிட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 21பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே காஷ்மீருக்கும் ஊடுருவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை அடுத்து காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Related Posts