உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிக்குமார் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதற்கிடையே தண்டனை பெற்ற 7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக சிறையியல் இருப்பதை சுட்டிக்காட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த  7 பேர் விடுதலையில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. உடனே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, “ராஜீவ் கொலை கைதிகள் 7பேரையும் விடுதலை” செய்யப்போவதாக அறிவித்தார். இதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அவர் அனுப்பி இருந்தார். ஆனால் மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. நடத்தியதால் கைதிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு அளித்தஉச்சநீதிமன்றம் “7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம்” என்று அறிவித்தது. இதையடுத்து தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் பன்வாரிலால் புரோகித் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், 7 பேரை விடுதலை செய்ய கோரும் தமிழகஅமைச்சரவை பரிந்துரையை மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியானது. இந்த பரபரப்பு தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த கைதிகளை விடுதலை செய்யக்கோரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக சில நாளிதழ்களில்செய்தி வெளியானது எனவும். இதை அடிப்படையாக கொண்டு சில தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு ஆளுநர்மாளிகை சார்பில் எந்த ஒரு குறிப்பும் அனுப்பப்படவில்லை என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts